கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் ,தென்னை மரத்தை போட்டு ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவில் கொல்லம் மாவட்டம் வர்க்கலாவை அடுத்துள்ள எடவயல் பகுதியில், இரட்டை ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் வழியாக அனைத்து ரயில்களும் குருவாயூருக்கு செல்லும். அதன்படி கடந்த ஞாயிற்றுகிழமை சென்னையிலிருந்து நாகர்கோவில் வழியாக செல்லும் ,குருவாயூர் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளது. இந்த ரயில் இரவு 11.30 மணியளவில் எடவயல் தண்டவாளத்திற்கு ,அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலை இயக்கிக் கொண்டிருந்த டிரைவர் தென்னை மரங்களை தண்டவாளத்தில் ,இரண்டாக அறுத்து போடப்பட்டிருப்பதை கண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் ரயிலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தார்.
ஆனால் ரயில் நிற்காமல் விரைவாக சென்று கொண்டிருந்ததால், தென்னை மரத்தில் மீது ரயில் மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க கம்பியில் தென்னைமரம் சிக்கியதால் ,ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலுக்கும் ,ரயிலில் உள்ள பயணிகளுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மோதிய வேகத்தில் பயங்கர சத்தம்கேட்டு, ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கொல்லம் ரயில்வே போலீஸ் அதிகாரியான ராஜேந்திரனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ,ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி ரயிலின் கடைசி பெட்டிக்கு அருகே 2 இளைஞர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முரணாகப் பேசி உள்ளனர். இதனால் சந்தேகப்பட்ட ரயில்வே போலீசார் ,எர்ணாகுளம் பகுதி டி.எஸ்.பிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் டி.எஸ்.பி விசாரணை நடத்தியபோது ,அந்த 2 இளைஞர்களும் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சாஜி மற்றும் 30 வயதுடைய பிஜூ என்று தெரிந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதனால் 2 இளைஞர்களையும் கைது செய்த போலீசார் ,வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது .