சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான திருச்சி வேலுசாமி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் செய்தி தொடர்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளருமான திருச்சி வேலுசாமி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு என உள்ள தனிச்சிறப்புகள் அனைத்தையும் கொண்டவர் நமது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி. கலாச்சார கருவூலமாக, பண்பாட்டு பெட்டகமாய், பாரபட்சமின்றி தொகுதி மக்களுக்கு பாடுபடுபவர், உழைப்பின் சிகரமாய், உண்மையின் உருவமாய் திகழ்பவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி. மத்திய அரசிடமிருந்து தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோது எந்த நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. தமிழகத்திற்கான பங்கு ஜி.எஸ்.டி. வருவாயிலிருந்து கிடைக்கவில்லை. சி.பி.ஐ. தமிழகத்தின் தலைமை செயலகத்தில் சோதனை நடத்தி தமிழக அரசின் மாண்பையே கேள்விக்குறியாக்கியது. அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு மத்திய அரசிடம் இதுகுறித்து கேள்வி கேட்கும் துணிவு இருந்ததா ? இப்போது இப்படிப்பட்டவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.
தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து தமிழகம் இழந்த கவுரவத்தை மீட்க உள்ளோம். ஒற்றுமையாக சகோதரர்களாக நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். நம்மை இன, ஜாதி, மத அடிப்படையில் பிரிக்க சதி நடைபெற்று வருகிறது. அதனை முறியடித்து காட்டுவோம். பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி அளிக்கப்படும். விவசாயிகளின் கடன்களை உண்மையாகவே தள்ளுபடி செய்தவர், மாணவர்களுக்கு கல்விக் கடன் வாங்கியவர், உலகமே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர செய்தவர், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையச் செய்தவர், மண்ணின் மைந்தர் ப.சிதம்பரம் அடையாளம் காட்டிய வேட்பாளர் மாங்குடியை கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று அவர் பேசினார்.