பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து கொன்டே வருகின்றது. இதனால் அந்நாட்டில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 29ம் தேதி அந்நாட்டில் 6 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டம் கூடவும், விளையாட்டு திடல்கள் திறக்கப்படுவதாகவும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளது.
இந்நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மக்கள் கூட்டம் கூட்டமாக பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கூடுகின்றனர். மேலும் மக்கள் பூங்காக்களில் வைத்து மது அருந்துதல், உணவு சாப்பிடுதல் மற்றும் அங்கிருக்கும் மரங்களின் மீது ஏறி விளையாடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே பிரிட்டன் அரசு பூங்காக்களில் வைத்து மது அருந்துவதற்கு தடை விதித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் இக்காலத்தில் மக்கள் இவ்வளவு கூட்டம் கூடுவது நல்லதல்ல, இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர அதை அதிகரித்து விடக்கூடாது , எனவே மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு ரூ. 20,19,171 அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.