பாகிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மார்ச் 20ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பாகிஸ்தான் ஆளுநர் இம்ரான் இஸ்மாயில் தற்போது குணமடைந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி அன்று பாகிஸ்தானின் ஜனாதிபதியான ஆரிப் ஆல்வி முதற்கட்டமாக சீன நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியின் போட்டுக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் மக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெர்வேஸ் கத்தக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்றும் அந்நாட்டு ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் இதுவரை 659,116 பேர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 14,256 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.