புத்துணர்வு முகாமிற்கு சென்று விட்டு காளையார் கோவிலில் உள்ள ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவிலுக்கு திரும்பிய சொர்ணவல்லி யானையை பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் சிறப்பு வாய்ந்த ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சொர்ணவல்லி என்ற யானை உள்ளது. இந்த யானை தமிழக அரசு சார்பில் நடைபெற்ற புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக மேட்டுப்பாளையத்துக்கு சென்றது. அங்கு சத்தான உணவுகள் யானைக்கு வழங்கப்பட்டது. மேலும் யானைக்கு நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சொர்ணவல்லி யானை முகாம் நிறைவு பெற்றதால் நேற்று அதிகாலை லாரியில் காளையார் கோவிலுக்கு வந்து இறங்கியது. அங்கு காளையார்கோவில் பக்தர்கள் யானையை உற்சாகத்துடன் வரவேற்றனர். முகாமிற்கு செல்லும்போது கால்நடை டாக்டர்கள் யானையின் உடல் எடை அதிகமாக இருந்ததால் எடையை குறைக்க அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி யானை உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் 200 கிலோ எடை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.