திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வேன் மீது அரசு பேருந்து மோதியதில் 13 பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.ரெங்கநாதபுரம் விலக்கு பகுதியில் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு வேனில் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 26-ஆம் அந்த பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி பகுதியில் இருந்து நூற்பாலைக்கு வேன் சென்று கொண்டிருந்தது. ரெங்கநாதபுரம் விலக்கு பகுதி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது.
இதில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதையடுத்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 13 பெண்கள் பலத்த காயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.