ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த தம்பதிகள் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா. இவர்களுக்கு அலெக்கியா (27 வயது) மற்றும் சாய் திவ்யா (22 வயது) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புருஷோத்தம் நாயுடு – பத்மஜா தம்பதிகள் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி பக்தியின் மூலம் அற்புதங்கள் செய்ய போவதாக கூறி பூஜை அறையில் வைத்து தனது இரண்டு மகள்களையும் நிர்வாணப்படுத்தி அடித்து படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அதன்பின்னர் இவர்களுக்கு மனதளவில் பிரச்சனை இருப்பதாக கருதிய காவல்துறையினர் அவர்களை விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர்கள் இருவரும் பூரண குணமடைந்து விட்டதகவும், இங்கிருந்து அழைத்து செல்லலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் காவல்துறையினர் அவர்கள் இருவரையும் சிறைச்சாலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதனிடையே அவர்கள் இருவரும் பெற்ற மகள்களை கொலை செய்து விட்டதை நினைத்து மிகவும் வருத்தபடுவதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.