மியான்மரில் போராட்டங்களில் ஈடுபடுவோரை இராணுவ ஆட்சி குழுவினர் தலையிலும் முதுகிலும் சுட்டுக் கொல்வோம் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்துள்ளனர்.
மியான்மரில் பிப்ரவரி 1 ஆட்சிக்கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 320 க்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவரையும் பெண்கள் ,சிறுமிகள் என்று பாராமல் பாரபட்சமில்லாமல் சுட்டுக்கொன்றனர்.
இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆயுதப்படை தினமான இன்று ஜெனரலுக்கு எதிராக பெரும் எதிர்ப்பைக் காட்டுமாறு ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் .ராணுவ ஆட்சிக்குழு ஆயுதப்படை தின விழாவிற்கு ஏற்பாடு செய்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தலையில் அல்லது முதுகில் சுடப்பட்டு கொல்லப்படுவார்கள் என்று நேரடியாகவே எச்சரிக்கை செய்துள்ளது.