சூயஸ் கால்வாயில் விபத்தை ஏற்படுத்திய கப்பலில் பயணம் செய்த 25 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஸோயி கிஷன் கைஷா என்னும் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு எவர்கிவன் என்னும் கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த கப்பல் சீனாவிலிருந்து சுமார் 20,000 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. அப்போது இந்த கப்பல் கடந்த 23ஆம் தேதி சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக தனது கட்டுப்பாட்டை இழந்து அங்கேயும் இங்கேயும் சுற்றி இறுதியில் அக்கால்வாயில் குறுக்கும் நெடுக்குமாக சிக்கி கொண்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அப்பகுதியில் வந்து கப்பலை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதனை சரி செய்ய எப்படியும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உலகின் முக்கிய கடல்வழி போக்குவரத்தான சூயஸ் கால்வாய் வழியாக மற்ற கப்பல்களும் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சூயஸ் கால்வாயில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து எவர்கிவன் கப்பலின் தலைவர் மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இந்தக் கப்பலில் பயணம் செய்த 25 நபர்களும் இந்தியர்கள் என்றும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட கடற்படை காவல்துறையினர் கப்பல் என்ஜின் கோளாறு காரணமாகவோ அல்லது தொழில்நுட்ப காரணமாகவோ விபத்து ஏற்படவில்லை, சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட புயல்தான் கப்பலை விபத்தில் சிக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளனர்.