மியான்மரில் குடியிருப்புக்குள் புகுந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2665 பேர் கைது செய்யப்பட்டதில் 2290 பேர் இன்னும் விடுதலை ஆகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாத குடியிருப்புக்குள் பாதுகாப்பு படையினர் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினர். அதில் 14 வயது சிறுவன் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் சிறுவனின் உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்வதற்கு முன்பு அவரது தாயும் உறவினர்களும் இறுக்கி அணைத்தபடி கதறி அழுதனர்.
இந்த சம்பவம் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது. இதற்கிடையில் மியான்மரில் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் வருத்தம் தெரிவிக்கிறோம் என்றும், ஆனால் இந்த விபரீத சம்பவத்திற்கு காரணம் மக்களின் தேவையற்ற போராட்டம் தான் என்றும் ராணுவத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.