சூரியின் மூலம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது “காடன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்னை நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று பிரபல காமெடி நடிகர் சூரி புகார் அளித்தார்.
ஆனால், விஷ்ணு விஷால் தன் தந்தை இதுபோன்ற தவறை செய்திருக்க மாட்டார் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இச்செய்தி அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவ்வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஷ்ணு விஷாலிடம் சிலர் இது குறித்த கேள்வியை எழுப்பி வந்தனர்.
இதற்கு அவர் கூறியதாவது, “நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இது பற்றி என்னால் முழுமையாக பேச முடியாது. ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட புகாருக்கும் என் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. சூரியின் புகாரில் இருக்கும் ஒவ்வொரு வரிக்கும் என்னால் விளக்கம் சொல்ல முடியும். அவ்வாறு செய்தால் சூரியின் இருண்ட பக்கங்களை வெளியில் சொல்ல வேண்டி இருக்கும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன்.
அப்படி செய்தால் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிவிடும். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பு அவர் என் தந்தை காலில் விழுந்து வணங்கி, நீங்கள் தான் என் கடவுள் என்று சொன்ன அவர் தற்போது எங்கள் மீது புகார் அளித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. குறிப்பாக அவர் மூலம் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை” என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.