மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மணல் அள்ளி வந்த 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் 2021 கான சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரிகளை மறித்து சோதனை செய்ததில் 3 லாரிகளில் 3 யூனிட் வீதம் 9 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்தது அம்பலமானது. இந்நிலையில் மணல் அள்ளுவதற்கான அனுமதி சீட்டு திருத்தப்பட்டிருப்பதை போலீசார்கள் கண்டுபிடித்தனர். இச்செயலில் ஈடுபட்ட லாரி டிரைவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய லாரிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.