திருத்துறைபூண்டி தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், பொங்கு சனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புனித தலங்கள் உள்ளன. உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருத்துறைபூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதி இது.
தற்போது திமுகவின் ஆடலரசன் எம்எல்ஏவாக உள்ளார். திருத்துறைப்பூண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,39,136 ஆகும். போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழி சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்பதும், எழிலூர் கிராமத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியை தூர்வார வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கைகளாக உள்ளன. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சாலையில் ரயில்வே மேம்பால பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதும் மக்களின் வேண்டுகோள்.
தொகுதி நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக மக்கள் எம்எல்ஏவுக்கு பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். திமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு அதிமுக முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கை. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கவேண்டும்.
அலையாத்தி காடு பகுதிகளை சுற்றுலா தலமாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். திருத்துறைபூண்டி சுற்றுவட்டார சாலை திட்டம் கலைஞரால் தொடங்கப்பட்டு ஆட்சி மாற்றம் காரணமாக செயல்படுத்தப்படாமல் உள்ளதாக எம்எல்ஏ கூறுகிறார். திருத்துறைப்பூண்டியில் உள்ள வருவாய் கிராமங்களில் புயல் எச்சரிக்கை மையங்களை உருவாக்க வேண்டும் என்றும், கோட்டூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன.