நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படக்குழுவினர் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் சேர்ந்து நடித்துள்ள படம் “லாபம்”. இப்படத்தை மறைந்த எஸ்பி ஜனநாதன் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாபம் படத்தின் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “தற்போது லாபம் படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் மறைவு எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைப்படங்களில் வெளிப்படுத்தும் கருத்துக்களும், போராட்டக் குரல்களும், காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.
அவர் இப்படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்துள்ளார். இன்னும் சில பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. அவை அனைத்தும் முடிந்த பிறகு முன்பு திட்டமிட்டிருந்தபடி வரும் ஏப்ரல் மாதம் லாபம் படம் வெளியிடப்படும்.
மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்படும் லாபம் திரைப்படம் மறைந்த எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவருடைய ரசிகர்களுக்கு நல்ல திரைப்படமாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.