Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி என 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. காரைக்குடி தொகுதியில் 443 பூத்கள் உள்ளது. இங்கு 1640 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், மானாமதுரையில் உள்ள 399 பூத்களில் 1, 477 எந்திரங்களும், சிவகங்கை தொகுதியில் 427 பூத்களில் 1,582 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், திருப்பத்தூரில் 410 பொருட்களில் 1,517 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் மொத்தம் 6,216 இயந்திரங்கள் தேர்தலை முன்னிட்டு பயன்படுத்த உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து இயந்திரங்களும் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் அழகப்பா பொறியியல் கல்லூரியில் இரண்டாவது மாடியில் வாக்கு பேட்டி வைக்கும் பாதுகாப்பு அறையாகவும், பிரதான கட்டிடத்தின் முதல் மாடியில் திருப்பத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முதல் தளம் காரைக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கையும், வாக்கு பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் முருகப்பா அரங்கிலும், அதன் முன்புறம் அமைந்துள்ள மேல்மாடியில் மானாமதுரை தொகுதிக்கான வாக்குப் பெட்டிகளும் வைக்கும் அறை அமைக்கப்பட்டுள்ளது. அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் கீழ் தளத்தில் சிவகங்கை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம், அதன் மேல் தளத்தில் வாக்குப் பெட்டிகளும் வைக்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப் பெட்டிகள் வைக்கும் அறை மற்றும் வாக்கு பதிவு நடைபெறும் அறை ஆகியவற்றிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வருவாய் துறையினருடன் அங்கு அமைக்கப்பட்டு வரும் தடுப்பு வேலிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆய்வின்போது செய்தித் தொடர்பு அலுவலர் பாண்டி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |