ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த பூகம்பம் நேற்று மாலை 6.10 மணியில் இருந்து ஏற்பட்டது. இதன் மையமானது இஷினோமாகியில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில், மியாகி கடற்கரையில் கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த பூகம்பத்தை தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்தனர். பின்னர், சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக இந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த பூகம்பத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். சில வாரங்களுக்கு முன்பும் ஜப்பானில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ஆனால், அதில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.