மனித உரிமைகள் ஆணையம் சகதியில் சிக்கி காயமடைந்த கூலித் தொழிலாளிக்கு தமிழக அரசு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மனுவை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு மழையின்போது தான் சகதியில் சிக்கி கீழே விழுந்ததாகவும், அதனால் தனது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜமாணிக்கம் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகும் தன்னுடைய காயம் குணமடையாததால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
அங்கு டாக்டர் ராஜமாணிக்கத்திற்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் தான் காயம் குணமடையவில்லை என கூறியதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னால் சரியாக நடக்க முடியாத காரணத்தால் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழக அரசு கூலித் தொழிலாளியாக இருக்கும் ராஜ மாணிக்கத்துக்கு ஏற்பட்ட காயத்தால் அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இழப்பீடாக நான்கு வாரத்திற்குள் 3 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.