இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாவது ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டார். இதனை அடுத்து 14 ஓட்டங்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க, கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த கோஹ்லியும் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில் அரைசதம் கடந்து 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து விட்டார். இதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் 30 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 11 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 37 ஓட்டங்கள் எடுத்து அதிரடியாக விளையாடி உள்ளார். அதன் பிறகு இறுதியாக 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 185 ஓட்டங்கள் இந்திய அணி எடுத்துள்ளது.
இந்நிலையில் 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. அப்போது துவக்க வீரர் பட்லர் 9 ஓட்டங்களும், ஜேசன் ராய் 40 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்துள்ளனர். அதன்பின் மலான் 17 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்ததால் விளையாட்டு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ச்டோவ் 25 ஓட்டங்களும், ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களும் எடுத்துள்ளனர். இதனை அடுத்து கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் பந்துவீச இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 23 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்துள்ளனர்.
அப்போது ஜோர்டன் முதல் பந்தில் ஒரு ஓட்டமும், ஆர்ச்சர் இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் சிக்சர் அடித்து விளாசி விட்டார். அதன் பின் ஐந்தாவது பந்தில் ஜோர்டன் அவுட்டாக, கடைசி பந்தில் 9 ஓட்டம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த பந்தில் எந்த ஓட்டமும் எடுக்கப்படாததால் இந்திய அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றது.