உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ஐந்தரை லட்சம் பணத்தை திருவையாறு பகுதியில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் எந்தவித ஊழல் ஏற்படக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு மெயின் ரோட்டில் நேற்று பறக்கும் படை அலுவலர் புனிதா தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனையில் ஈடுபட்டு ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்து கொண்டிருநத்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணம் இன்றி ஐந்தரை லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரை விசாரித்த போது அவர் பார்த்திபன் என்றும் தனியார் வங்கியில் வேலை செய்வதாக கூறினார். மேலும் மகளிர் சுய உதவி குழுவுக்கு பணம் கொடுப்பதற்காக இப்பணத்தை எடுத்துச் செல்வதாக கூறினார். இதனை தொடர்ந்து பணத்தை அவரிடம் இருந்து கைப்பற்றி திருவையாறு தேர்தல் அதிகாரி மஞ்சுளாவிடம் ஒப்படைத்தனர்.