நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவை பொறுத்தவரை இந்த தொகுதிக்கு எந்தவித உதவியும் செய்ய வில்லை. கொரோனா காலத்தில் திமுக கட்சிக்காரர்கள் எட்டி கூட பார்க்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை உயிருக்கு பயந்து கூட திமுகவினர் வெளியே வராத நிலையில் இந்த தொகுதியை சார்ந்த… தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலே கொரோனா காலத்தில் மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்று வேண்டிய உதவிகள் செய்தேன்.
குறிப்பாக ரேஷன் கடை மூலமாக கொடுக்கப்பட்ட நிவாரணத்தை நானே நின்று நேரடியா கொடுத்தேன். அதோடு மட்டுமில்லாமல் நேரடியாக என்னுடைய சொந்த செலவில் கிட்டத்தட்ட இரண்டு முறை அரிசி, மளிகை பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்கள் எல்லாம் 50,000 குடும்பங்களுக்கு மேல் கொடுக்கப்பட்டது. இப்படி மக்கள் கஷ்டப்படும்போது, மக்கள் துன்பப்படும் போது அந்த நேரங்களிலே கூட நாங்கள் எல்லாம் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியிருக்கிறோம்.
கொரோனா காலத்திலே எங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல், மக்களுடன் இருந்து பணியாற்றதையெல்லாம் நிச்சயமாக மக்கள் என்றைக்குமே மறக்க மாட்டார்கள். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுகின்ற நிலையில் அதற்கு அங்கீகாரமாக மீண்டும் என்னை இந்த தொகுதியில் கழகத்தின் சார்பிலே வெற்றி பெற வைத்து,
சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்து, ராயபுரத்தின் குரல் ஒழிக்கின்ற வகையிலும், அதே போன்று ராயபுரம் தொகுதி என்னுடைய அன்பு மக்களுக்கு மீண்டும் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல தீர்ப்பை விரைவில் வழங்க இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.