சக்தி வாய்ந்த வெடி பயன்படுத்திய கல்குவாரியை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கல்குவாரியில் பாறையை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்துவிட்டது. இது குறித்து காவல்துறையினருக்கு கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சக்தி வாய்ந்த வெடி வைத்து பாறைகளை தகர்த்துவதால் தான் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து கோடங்கிபாளையம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.