கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி ஹோட்டல் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ஞானாம்பிகை என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டல் முடிந்த பிறகு ஞானாம்பிகை வீட்டிற்கு சென்றுவிட்டு மறுநாள் காலை ஹோட்டலுக்கு வந்து பார்த்தபோது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதன் பின் அங்கிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ மளமளவென பரவி விட்டது. இது குறித்து தகவலறிந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விட்டனர். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்புள்ள நாற்காலிகள், மேசைகள் மற்றும் இதர பொருட்கள் எரிந்து நாசமாகி விட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த ஹோட்டலில் மூன்று கேஸ் சிலிண்டர்கள் இருந்ததும், அதில் 2 சிலிண்டர்கள் கேஸ் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.