தமிழக சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டு இந்தியர்கள் எவ்வாறு வாக்களிக்கலாம் என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வாக்களிக்க தயாராக இருக்கும் நிலையில் வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள் எப்படி வாக்களிக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது அது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, இதர காரணங்கள் எதற்காக சென்றிருந்தாலும் தங்களது பாஸ்போர்ட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியில் தங்களை இந்திய வாக்காளர்களாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்திய தூதரகத்தில் கட்டணம் செலுத்தாமல் படிவங்களை வாங்கிகொள்ளலாம் அல்லது www.mvsp.in என்ற இணையதளத்தின் மூலம் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆதாரங்களை இணைத்து தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன்பின் வாக்குச்சாவடி அலுவலர் விண்ணப்பத்தில் உள்ள முகவரிக்கு நேரில் சென்று ஆவணங்களை சரிபார்த்தபின் வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற பிரிவில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படும். இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாது. வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்கும் போது பாஸ்போர்ட்டை ஆதாரமாக கொடுத்து வாக்களிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.