கடும் வீழ்ச்சிக்குப் பிறகு தேயிலையின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டு உள்ளனர். இதற்காக நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளும், கூட்டுறவு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. இந்நிலையில் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சைத் தேயிலையை விவசாயிகள் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். இதையடுத்து தொழிற்சாலைகளில் பச்சைத் தேயிலையை கொண்டு தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் ஆன்லைன் மூலம் குன்னூரில் உள்ள ஏல மையத்தில் ஏலம் விடப்படுவது வழக்கம்.
இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலை தூளை ஏலம் எடுக்கின்றனர். இந்நிலையில் கடந்த 11, 12ம் தேதிகளில் நடைபெற்ற ஏலத்தில் 12 லட்சத்து 2 ஆயிரம் கிலோ தேயிலை தூள் 14 கோடியே 74 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இந்த விற்பனையானது 86 சதவீத விற்பனையாகும். இவ்வாறு தேயிலை தூளின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கி இருந்தனர். ஆனால் கிலோவுக்கு ஒரு ரூபாய் விலை தற்போது உயர்ந்ததால் அடுத்த ஏலத்தில் தேயிலைத்தூள் நல்ல விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.