பாரிசில் காவல்துறை அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்க முயன்ற மர்ம நபர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பாரிஸின் 18வது மாவட்டத்தில் இருக்கும் ரூ போயினோடு என்ற பகுதியில் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் குடும்ப வன்முறை புகார் ஒன்றை விசாரிப்பதற்காக ஒரு குடியிருப்பிற்கு சென்றுள்ளனர். அந்த சமயத்தில் வெளியில் நின்றிருந்த ஒரு அதிகாரி மீது மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த அதிகாரி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். எனினும் அந்த மர்ம நபரை முதலில் மிரட்டி அங்கிருந்து அனுப்புவதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் மீண்டும் வந்து அதிகாரியை தாக்க முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அந்த மர்ம நபர் உயிரிழந்தவுடன் அந்த அதிகாரி அதிர்ச்சிக்குள்ளானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, இந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று தெரியவந்திருக்கிறது.