தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற விழுந்து 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சுப்பு பிள்ளை தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இனியாசி என்ற 1 1/2 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு குமரேசன் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அதேசமயம் கலைவாணியும் கண் அயர்ந்து தூங்கி விட்டதால் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளிக்குள் குழந்தை தலை குப்புற விழுந்ததால் மூச்சு திணறி இறந்து விட்டது.
இந்நிலையில் கண்விழித்துப் பார்த்த கலைவாணி தனது குழந்தையை காணாததால் எல்லா இடமும் தேடிப் பார்த்துவிட்டு பின் குளியல் அறைக்கு சென்று பார்த்தபோது தனது குழந்தை தண்ணீருக்குள் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் கணவன் மனைவி இருவரும் குழந்தையை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வடக்கு கடற்கரை காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.