உத்திரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் அமெரிக்கன் உணவகத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் தீபாலி தியாகி. சைவ பிரியரான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்கன் உணவகத்தில் சைவ பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் இவர் ஆர்டர் செய்த உணவை அரை மணி நேரம் தாமதமாக கொண்டுவந்தது மட்டுமல்லாமல், சைவ பீட்சாவுக்கு பதிலாக அசைவ பீட்சாவை டெலிவரி செய்துள்ளனர். இதனிடையே இந்த பீட்சாவை சாப்பிட்ட பிறகுதான் அந்த பெண்ணிற்கு இது அசைவ பீட்சா என்பது தெரிய வந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த அவர் அந்த உணவகத்தின் மீது புகார் அளித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த உணவகத்தின் உரிமையாளர் தங்கள் குடும்பத்திற்கு இலவசமாக பீட்சா தருவதாக கூறி அவரை சமாதானப்படுத்தியுள்ளார். இதனை கேட்டு மன உளைச்சலுக்கு ஆளான அந்தப்பெண் தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக இலவசமாக பீட்சா தருவதாக கூறுகிறீர்கள். இது சாதாரண விஷயம் இல்லை பிறந்ததிலிருந்து நாங்கள் காப்பாற்றி வந்த எங்களது பாரம்பரிய பழக்க வழக்கத்தை என்னால் காப்பாற்ற முடியாது.
இச்சம்பவத்தால் எங்களது குடும்பத்தை சுத்திகரிக்க மதிப்புமிக்க யாகங்கள் செய்ததால் தங்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் அமெரிக்கன் உணவகத்தால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் கூறி இதனை சரிசெய்ய ரூ. 1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மார்ச் 17-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அமெரிக்கன் உணவகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.