மும்பையில் இளம்பெண் ஒருவர் 73 வயது முதியவரிடம் திருமண ஆசை காட்டி 1.3 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் வசிக்கும் ஜெரோன் டி சவுசா என்ற 73 வயதுடைய முதியவர், தன் தந்தை வாங்கிய ஒரு நிலத்தை கடந்த 2010ஆம் வருடம் விற்பனை செய்துள்ளார். மேலும் இதன் மூலம் கிடைத்த பணத்தை ஒரு நிதி நிறுவனத்தில் 4 முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார். இதன் காரணமாக அடிக்கடி வங்கிக்கு சென்ற போது அங்கு பணியாற்றிய ஷாலினி சிங் என்ற இளம்பெண்ணுடன் பழகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அதன் பிறகு ஷாலினி, ஜெரோனை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் இறுதி காலம் வரை கூடவே இருந்து கவனித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இந்த வார்த்தையால் நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று ஜெரோன் உடனடியாக திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் பார்க், ரெஸ்டாரண்ட் என்று சுற்றுலா சென்று மகிழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஷாலினி தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெரோனிடம் பணம் கேட்டுள்ளார். மேலும் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெரோனும் தான் வைத்திருந்த 1.3 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்ட ஷாலினி ஜெரோனுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டார். இதனால் அதிர்ந்து போன ஜெரோன், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஜெரோன் தன்னை ஷாலினி எவ்வாறெல்லாம் பேசி ஏமாற்றினார் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த பெண் தற்போது வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.