சிவகங்கையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருள்களை வாகன சோதனையின் போது தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் இதுவரை ரூ.54 லட்சத்து 4 ஆயிரத்து 180 பணம் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலர்களின் வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் புகார் சம்பந்தமாக தகவல்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.12 லட்சத்து 16 ஆயிரத்து 800 மதிப்பிலான ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போல ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27 ஆயிரத்து 320 மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.54 லட்சத்து 4 ஆயிரத்து 180 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 948 மதிப்பிலான சிகரெட், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாகன சோதனையின் போது காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 410 மதிப்பீட்டிலான தங்க நகைகள் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரொக்கப் பணமாக ரூ.54 லட்சத்து 4 ஆயிரத்து 180 , பொருள்களாக ரூ.19 லட்சத்து 98 ஆயிரத்து 478 பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழு பறிமுதல் செய்துள்ளது.