Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உடைந்த (உண்மை) வரலாறு …!!

ஒரு அரசியல் கட்சி  உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம்,  ஆனால் அது உறைவதற்கோ, உடைக்கப் படுவதற்கோ இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று சித்தாந்த சிக்கல், மற்றொன்று தன்முனைப்பு.

சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தே கூட இருக்கலாம். சித்தாந்த சிக்கல்களில் சமரசம் செய்துகொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகார மட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனித்து மட்டுமல்ல,  அதிகார ஏணியில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முரண்டு பிடிப்பதுதான். தன்முனைப்பே பதவி தாகத்தை தூண்டுகிறது. அதைத் தணிக்க தோதுவான முடிவை எடுப்பதில் கட்சி தலைமை தவறும் போது,  கட்சிக்குள் குழப்பம் உருவாகிறது. அதுவே பிளவுக்கு இட்டுச் செல்கிறது.

தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்த அனேக பிளவுகளும் அப்படித்தான் என சொல்கின்றனர்.

பெரியாரிடம் இருந்து அண்ணா விலகிய போது ஈவேகே. சம்பத் மட்டும் பெரியாரோடு தங்கி இருந்தால் அவருடைய அரசியல் வாழ்க்கையின் திசை வழி பாதை வேறு எங்கோ சென்றிருக்கும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். ஆனால் அண்ணாவின் தம்பியாக இருந்து, அண்ணாவை நம்பி, அவருடனேயே வந்து, திமுகவை நிர்மானித்து, அந்த கட்சிக்கு கொள்கை, கோட்பாடு, முகங்களை உருவாக்கினார் ஈவேகே. சம்பத். அறிவு தளத்தில் இயங்கிய ஈவேகே.சம்பத்துக்கு திமுகவின் முன்னணி தலைவர்கள் சினிமாவை சுற்று சுற்றி வருவதிலும், அதை பிடித்துக்கொண்டு கட்சியில் வளர்ப்பதிலும் விருப்பம் இல்லை.

கருணாநிதி – ஈவேகே.சம்பத் மோதல்:

சித்தாந்தம் பேசவேண்டிய மேடையில் சினிமா பேசுவதை ஈவேகே. சம்பத் வெறுத்தார். அதை முதலில் மென்மையாக சொன்னார், பின்னர் உரத்த குரலில் சொன்னார். அவருடைய கருத்திற்கு ஆதரவாக அண்ணாவிடமிருந்து பெரிய சலனங்கள் வரவில்லை. இன்னொரு பக்கம் கருணாநிதி போன்ற இளம் தலைவர்களின் அணுகு முறைகளும், செயல்பாடுகளும் ஈவேகே.சம்பத்துக்கு பிடித்தமானதாக இல்லை.கருணாநிதியின் வளர்ச்சியையும், சம்பத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மாயவரம் பொதுக்குழுவில் ஆரம்பித்த ஈவேகே.சம்பத் – கருணாநிதி மோதல் வேலூர் பொதுக்குழுவில் அப்பட்டமாக அம்பலத்திற்கு வந்தது.

கவிஞர் கண்ணதாசன் மீது தாக்குதல்:

அவை தலைவர் பதவிக்கு அதிக அதிகாரம், பொருளாளர் பதவிக்கு பொறுப்புகள் குறைப்பு என்பதுதான் பிரச்சனைக்கு காரணமாக அமைந்தது. பொதுக் குழுவில் தள்ளுமுள்ளுக்களும், கைகலப்பு ம் நடந்தன. பின்னர் அவை தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஈவேகே.சம்பத். அத்தோடு பிரச்சனை முடிந்தது என்று தான் நினைத்தார்கள். ஆனால் பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் சம்பத் ஆதரவாளரான கவிஞர் கண்ணதாசன் தாக்கப்பட்டது மீண்டும் பிரச்சனையை கிளப்பியது. நீதி கேட்டு உண்ணாவிரதம் தொடங்கினார் சம்பத். திமுக உடைவதற்கான எல்லா காரியங்களும் நடந்து வருவதாக பத்திரிக்கைகள் பரபரப்பு காட்டின.

தமிழ் தேசிய கட்சி:

ஈவேகே. சம்பத்தை சமாதானம் செய்யும் நடவடிக்கைகளை எடுத்தால் அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. உச்சக்கட்டமாக திமுகவில்  இருந்து வெளியேறிய ஈவேகே.சம்பத் 1961ஆம் ஆண்டு மத்தியில் தமிழ் தேசிய கட்சியை தொடங்கினார்.நேற்றுவரை திராவிட தேசியம் பேசிய சம்பத், இப்பொழுது தமிழ் தேசியம் பேசத் தொடங்கினார். திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தாமல் இந்திய கூட்டரசுக்குள் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ் தேசியம் தான் சரியான பாதை என்றார் ஈவேகே. சம்பத். சரியாக சொல்லவேண்டும் என்றால்… திமுகவில் இருந்து விலகும் வரைக்கும் தனிமனித கருத்து வேறுபாடுகளை அதிகம் விவாதத்தில் இருந்தன.

காங்கிரசோடு கரைந்த ஈவேகே. சம்பத்:

தமிழ் தேசியம் பற்றி செயற்குழு, பொது குழுக்களில் விவாதங்கள் ஏதும் நடக்கவில்லை. தனிப்பட்ட சந்திப்புகளிலும், விவாதகளிலும் பேசப்பட்ட ன. பகிரங்கமாக பேசப்படவில்லை, ஆனால் பிரிந்த போது தமிழ் தேசியம் சித்தாந்த பிரச்சனை என்று சொன்னார் ஈவேகே.சம்பத். தமிழ் தேசியம் பற்றி ஈவேகே. சம்பத்தின் கருத்துக்களுக்கு அவருடைய பழைய உரைகளில் இருந்தே பதில்களை கொடுத்தார் அண்ணா. திமுகவுக்கு எதிராக களம் கண்ட தமிழ் தேசிய கட்சி தேர்தல்,  அரசியலில் சோபிக்க முடியவில்லை. நேர்வின் மறைவிற்கு பிறகு சோஷலிச சக்திகளுக்கு காமராஜர் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸில் கரைந்து விட்டார் ஈவேகே. சம்பத்.

திமுக VS எம்.ஜி.ஆர் மோதல்:

தமிழ் தேசியம் பேசியவர் அதற்கு முற்றிலும் மாறுபட்ட இந்திய தேசியத்தில் இணைத்துக் கொண்டார். திமுகவில் ஈவேகே.சம்பத் ஏற்படுத்தியது தான் முதல் பிளவு. அதன் பிறகு பெரிய பிளவுகள் என்றால் எம்.ஜி.ஆரும், வைகோவும் 20 ஆண்டு இடைவெளியில்
ஏற்படுத்திய இருவேறு பிளவுகளை சொல்ல வேண்டும்.எம்.ஜி.ஆரின் விலகலில் சித்தாந்த சிக்கல் ஏதும் இல்லை. திரை உலகில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாக தன் மகன் முத்துவை களமிறக்கினார் கருணாநிதி. அமைச்சரவையில் எம்.ஜி.ஆரை சேர்க்கவில்லை என்பன போன்ற புகார்கள் கருணாநிதி மீதும், கட்சிக்குள் கேட்கவேண்டிய கணக்கை பொதுவெளியில் கேட்டார்.

மக்கள் திமுக:

திமுக என்றால் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் என்றால் திமுக என்று முழங்கி, கட்சி தலைமைக்கு சவால் விடுத்தார் என பல புகார்கள் எம்ஜிஆர் மீதும் எழுந்தன. எல்லாமாக சேர்ந்து எம்.ஜி.ஆரை வெளியேற்றின. எம்.ஜி.ஆர் விலகலுக்கு பிறகு திமுகவுக்குள் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தினார் மூத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியன். கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மக்கள் திமுகவை தொடங்கிய அவர், பின்னாளில் அதிமுகவிலேயே இணைந்து விட்டார்.

நமது கழகம்:

எம்.ஜி.ஆர் இருந்தபோதே அதிமுகவில் இருந்து விலகி நமது கழகம் என்ற தனிக்கட்சி தொடங்கி சில காலம் நடத்தியவர் எஸ்.டி. சோமசுந்தரம். பின்னர் அவர் அதிமுகவிலேயே இணைத்துக் கொண்டார்.அதன் பிறகு ஏற்பட்ட முக்கியமான பிளவு என்பது எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பிறகு அதிமுகவிற்குள் ஏற்பட்ட பிளவு தான்.எம்.ஜி.ஆரின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப போவது யார் ? என்ற கேள்வி தான் அதிமுகவின் பிளவுக்கு பிரதான காரணம்.

ஜானகி முதல்வர் ஆனார்:

நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வர் ஆனார். அதற்கான நிரந்தர ஏற்பாட்டை செய்ய முனையும் பொழுது தான் சிக்கல் முளைத்தது. அதிமுக எம்.எல் .ஏக்கள் ஜானகி மற்றும் ஜெயலலிதா தலைமையில் இரண்டாக பிரிந்தனர். இரண்டு பிரிவுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அரசியல் காட்சி மாற்றங்களை தொடர்ந்து, ஜானகி எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்.ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸின் உதவி கோரப்பட்டது. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கே ஆதரவு என்று சொல்லிவிட்டார் ராஜீவ் காந்தி. பிறகு திமுகவிடம் பேசினார்கள் பலன் இல்லை. அதன் பிறகு நம்பிக்கை தீர்மானத்தில் ஜானகி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக ஜா VS அதிமுகஜெ:

என்றாலும் வாக்கெடுப்பின் பொழுது நடந்த வன்முறைகளை முன்வைத்து ஜானகி அரசு கலைக்கப்பட்டது.அதன் பிறகு நடந்த தேர்தலில் அதிமுக ஜா VS அதிமுகஜெ என்று இரண்டாக பிரிந்து தேர்தலை சந்தித்தனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜானகிக்கும், ஜெயலலிதாவுக்கும் முறையே இரட்டை புறா, சேவல் சின்னங்கள் ஒதுக்கப் பட்டன. தேர்தலின் முடிவில் அதிமுகவின் இரு பிரிவுகளும் தோற்ற போதும் ஜெயலலிதா பிரிவுக்கே செல்வாக்கு இருப்பது உறுதியானது. விளைவு இருதரப்பு முயற்சிகளின் பலனாக இரு பிரிவுகளும் இணைந்தனர்.  ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா. அதற்கு அடுத்து நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்தது.

அதிமுகவில் 3முக்கிய பிளவு:

அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர்களுள் மூன்று பேர் முக்கியமானவர். ஒருவர் எம்.ஜி.ஆரின் அணுக்கத் தொண்டர் ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆர் மன்றம், எம்.ஜி.ஆர் முன்னணி, எம்.ஜி.ஆர் கழகம் என்று மெல்ல மெல்ல நகர்ந்தவர். பின்னர் திமுகவின் நிரந்தர கூட்டணி கட்சியாக எம்.ஜி.ஆர் கழகத்தை மாற்றிவிட்டார். திமுகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்த ஓர் அறிய வாய்ப்பு என்பதால் ஆர்.எம்.வீயை எப்பொழுதும் தன்வசம் வைத்திருக்கிறது திமுக.

எஸ். திருநாவுக்கரசு:

அடுத்து எஸ். திருநாவுக்கரசு.  அண்ணா புரட்சி தலைவர், தமிழக முன்னேற்ற கழகம்,எம்.ஜி.ஆர்  அதிமுக என்று கட்சிகளின் பெயரை மாற்றியவர். பின்னர் தனது பெயரையும் சு. திருநாவுக்கரசர் என்று மாற்றி பகுத்தறிவு பாசறையிலிருந்து இந்துத்துவ முகாமுக்கு இடம் பெயர்ந்தார். அதற்கு பரிசாக வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பிடித்தார். பிறகு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து அந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராகவே மாறினார். தற்பொழுதும் காங்கிரஸ்லேயே தொடர்கிறார்.

பன்ருட்டி ராமச்சந்திரன்;

மூன்றாம் அவர், பன்ருட்டி ராமச்சந்திரன். ஜெயலலிதாவின் தீவிர எதிர்ப்பாளராக அறியப்பட்டவர். அதிமுகவில் இருந்து பிரிந்த நால்வர் அணியின் முக்கிய அங்கமாக இருந்தவர். அதிமுகவில் இருந்து விலகி சில காலம் தனியாக இயக்கினார். பின்னர் பாமகவில் இணைந்து, எம்.எல்.ஏவாக  ஆனார். டாக்டர்  ராமதாஸ்சுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி மக்கள் நல உரிமை கழகத்தை தொடங்கினார் .

தேமுதிக அழைப்பு;

திமுக ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்தார். பின்னர் அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுகினார். ஆனால் உங்கள் சேவை இன்னும் தேவை என்று சொல்லி அவரை தன்னுடன் கட்சிக்கு அழைத்து வந்தார்  தேமுதிக  தலைவர் விஜயகாந்த். 2005தில் தொடங்கி கடந்த ஆண்டு வரைக்கும் தேமுதிகவின் அவை தலைவராக விஜயகாந்தின் அரசியல் ஆலோசகராக இருந்தார். அதிமுக – தேமுதிக கூட்டணிக்கான பாலமாக விளங்கினார். ஆனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும்,  இவருக்குமான அதிகாரப் போட்டியை தாங்க முடியாமல் தேமுதிகவில் இருந்து விலகினார்.

மதிமுக:

ஆனாலும் அரசியல் ஆசை அத்தனை சுலபத்தில் அகன்று விடுமா என்ன ? பண்ருட்டியார் இப்பொழுது அதிமுகவில் இருக்கிறார்.காலச் சக்கரம் முன்னோக்கி சுழலும், ஆனால் அரசியல் சக்கரம் தேவைப்பட்டால் பின்னோக்கியும் சுழலும் என்பதற்கு பன்ருட்டியார் சரியான உதாரணம். திமுகவில் இருந்து பிரிந்து வைகோ மதிமுகவை உருவாக்கியது முக்கியமான அரசியல் நிகழ்வு. 1970களில் எம்.ஜி.ஆரால் சிக்கல் உருவானது போல 1990களின் மத்தியில் திமுகவிற்கு சிக்கல் உருவானது.

திமுக VS வைகோ:

அதன் பின்னணியில் இருந்தவர் வை.கோபால்சாமி என்கின்ற வைகோ. திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர், தேர்தல் பணி குழு செயலாளர், திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கை நட்சத்திரம் என்றாலும், தனது மகன் முக ஸ்டாலினை தலைவராக்க வைகோவை ஒதுக்குகின்றார்கள் என்று கருணாநிதி மீதும், ஈழத் தமிழர் பிரச்சனையில் திமுக தலைமையை மீறி செயல்படுகிறார் என்று வைகோ மீதும் எழுந்த குற்றச்சாட்டுகள் மதிமுக உருவாவதற்கு காரணமாக அமைந்தன.

வைகோ தலைமையில் மதிமுக தொடங்கிய நாள் முதல் பெரிய பிளவுகள் எதையும் சந்திக்கவில்லை. மாறாக அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் பலரும் மொத்தமாக விலகாமல் அவ்வப்போது விலகி சென்று உள்ளனர். பொன்.முத்துராமலிங்கம், டி.கே.லக்குமணன், தங்கவேலு, மைதீன் கான், மா. மீனாட்சி சுந்தரம், கே.எஸ் ராதாகிருஷ்ணன் என்று ஒவ்வொருவராக வெளியேறினர்.

ஆனால் சற்றே கழகம் செய்து போட்டி மதிமுக என்றெல்லாம் படோபடமாக வெளியேறியவர்கள் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தான். ஆனால் இன்று எல்.கணேசன் அரவம் இன்றி  திமுகவில் இருக்கிறார். செஞ்சி.ராமச்சந்திரன் அதிமுகவில் ஐக்கியமானார்.மேற்கண்ட விலகல்கள் எல்லாமே சித்தாந்த அடிப்படையில் நடந்தவை அல்ல முழுக்கு முழுக்க தனிமனித பிரச்சனைகள், மோதல்கள், பதவி சிக்கல்கள் காரணமாக நடந்தவையே.

சசிகலா VS ஓபிஎஸ்:

 எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பிறகு எப்படி அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது ஏதோ…. அதுபோலவே ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகும் அதிமுக இரண்டாக பிளந்து, சசிகலாவிற்கும் – ஓ . பன்னீர்செல்வத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் அதிமுக அம்மா அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியும் உருவாகின. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் நீண்ட நெடிய சர்ச்சைகளுக்கும், சமாதானங்களுக்கும் நடுவே எடப்பாடி பழனிச்சாமியும் – ஓ.பன்னீர்செல்வமும் கைகுலுக்கவே இரட்டை இலை மீண்டும் தரப்பட்டது.

டிடிவி.தினகரன்:

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்னாள் அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக்கப்பட்ட டிடிவி தினகரன் தலைமையில் மற்றொரு அணி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று செயல்பட்டு வருகிறது. கட்சிகள் உடைந்ததும் பிரிந்ததும் திராவிட இயக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல.

தேசிய கட்சிகள் பிளவு:

தேசிய இயக்கத்திலும் பிளவுகள் நடந்தேறி உள்ளன.தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்கின்ற நான்கு கட்சிகளை தான் சொல்ல வேண்டும். இவற்றில் பாஜக தொடங்கியதிலிருந்து இன்றுவரை வளர்ந்து வரும் கட்சி தான். ஆகவே அந்த கட்சியில் குறிப்பிடத்தக்க பிளவுகள் ஏதும் இல்லை.

கம்யூனிஸ்ட் பிளவு:

ஆனால் 1960களின் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. அதுதான் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரிவுக்கு வித்திட்டது. அந்த சமயத்தில் இந்தியாவில் மட்டும் அல்ல…  சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிச நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுப்பட்டது. அதன் பிறகு தமிழக அளவில் பெரிய பிளவுகள் ஏதும் இல்லை. சின்ன சின்ன பிளவுகள் இருந்தன. 1994இல் திமுக – இந்திய கம்யூனிஸ்ட் உறவில் ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமி தமிழ்நாடு கம்யூனிஸ்ட் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கி திமுகவுடன் அணி அமைத்துக் கொண்டார். ஆனால் , அந்த கட்சி தமிழக அரசியலில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தா.பாண்டியன்:

அது போலவே கருத்து வேறுபாடு காரணமாக இந்திய கம்யூனிஸ்ட்டில் இருந்து விலகிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாண சுந்தரம்  ஐக்கிய பொதுவுடமைக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.அவருடன் இருந்தவர்களுள் முக்கியமானவர் தா. பாண்டியன். பின்னர் கல்யாண சுந்தரத்தின் மறைவிற்கு பிறகு கட்சியை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்து விட்டார். ஐக்கிய பொதுவுடமை கட்சியை நடத்திய போதும், காங்கிரஸின் கை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றவர் தா.பாண்டியன் என்பது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் பிளவு:

ஆனால், பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி பல்வேறு பிளவுகளை சந்தித்திருக்கிறது. முக்கியமாக ராஜாஜியின் சுதந்திரா கட்சியை சொல்ல வேண்டும். பொதுவாக அரசியல் கட்சிகளின் பிளவுக்கு தனிமனித மோதல்களே காரணம் என்பார்கள். ஆனால் ராஜாஜியின் சுதந்திரா கட்சி உருவானதற்கு அடிப்படையாக அமைந்தது சித்தாந்தம். நேருவின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஏற்பட்ட சித்தாந்த மோதல் காரணமாகவே 1959இல் சுதந்திரா கட்சியை தொடங்கினார் ராஜாஜி.

இந்திரா காங்கிரஸ்:

தேசிய அளவிலான அந்தக் கட்சி தமிழகத்தில் வீரியத்துடன் செயல்பட்டது. முதல் தேர்தலில் முத்துராமலிங்கத்தேவர், அடுத்த தேர்தலில் அண்ணாதுரை என்று விதவிதமான கூட்டணிகளை அமைத்து தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திருப்பங்களை நிகழ்த்த காரணமாக இருந்தார் ராஜாஜி. காமராஜர் காலத்திலும் காங்கிரஸில் பிளவுகள் ஏற்பட்டன. ஸ்தாபன  காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் உருவாகின. அவற்றிற்கு பிறகு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை ஐந்து தலைவர்கள் நிகழ்த்திய பிளவுகள்.

நடிகர் சிவாஜி கணேசன், குமரி ஆனந்தன், பழ.நெடுமாறன், வாழப்பாடி ராமமூர்த்தி, முக்கியமாக ஜிகே மூப்பனார். இந்த ஐந்து பிளவுகளில் முதல் நான்குமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாதவை. ஆனால் ஐந்தாவது பிளவு ஆகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.இன்று தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற ஸ்தாபனம் இருக்கிறது என்றால் அதற்கு அதி முக்கிய காரணம் இந்த பிளவு தான். 

குமரி ஆனந்தன்:

காங்கிரஸ் தலைவர்களுக்கே உரித்தான கோஷ்டி பிரச்சனை காரணமாக 1980களில் காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் குமரி அனந்தன். அதே சமயத்தில் தான் தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கியிருந்தார் பழ.நெடுமாறன். இருவருமே எம்.ஜி.ஆர்  தலைமையிலான அதிமுகவுடன் அணி அமைத்து போட்டியிட்டனர். கால ஓட்டத்தில் குமரி அனந்தன் தனது தாய் கட்சியான காங்கிரஸ்க்கே சென்றுவிட்டார். ஆனால் பழ.நெடுமாறனோ தேசிய அரசியல், தேர்தல் அரசியல் என்ற இரண்டிலும் இருந்து விலகி தமிழ் தேசிய பாதைக்கு சென்று விட்டார்.

நடிகர் சிவாஜி VS ராஜிவ் காந்தி;

இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால்…. நெடுமாறன், குமரி ஆனந்தன் போன்றோர் ஏற்படுத்திய பிளவுகள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு பலமாக அல்லது பலவீனமாக அமைத்ததே தவிர காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை.1980களின் இறுதியில் நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிளவை ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சி தலைமையால் குறிப்பாக…. ராஜீவ் காந்தியால் அதிகம் கவனிக்கப்படாத கோபம் சிவாஜிக்கு ஏற்பட்டது. முக்கியமாக ஜானகி எம்.ஜி.ஆரின் அரசு கவிழாமல் தடுக்க காங்கிரஸ் கை கொடுக்க வேண்டும் என்ற சிவாஜியின் கோரிக்கையை ராஜீவ் நிராகரித்து விட்டார். மேலும் ஜானகி அரசை கலைத்தது ம் சிவாஜியை கவலைப்பட வைத்தது.

தமிழக முன்னேற்ற முன்னணி:

விளைவு ஜானகி எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து விலகினார் சிவாஜி. தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி அடுத்து வந்த தேர்தலில் ஜானகி பிரிவு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படு தோல்வியை சந்தித்தார்.அப்பொழுது சிவாஜியுடன் சென்ற எம்.எல்.ஏக்களுள் ஒருவர் தான் இன்றைய இ.வி.கே.எஸ் இளங்கோவன். 1990களின் மத்தியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து என்.டி திவாரி விலகிய போது, அவர் பக்கம் நின்றவர் வாழப்பாடி ராமமூர்த்தி. திவாரி தலைமையிலான இந்திரா காங்கிரசின் தமிழக பிரிவுக்கு தலைமை ஏற்று நடத்திய அவர், பின்னர் தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற பெயரில் தனி கட்சி தொடங்கினார்.

மூப்பனார் VS காங்கிரஸ் மோதல்:

வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றார். ஆனாலும் காங்கிரஸில் இருந்த போது அனல் பறக்கும் அறிக்கை அரசியலை நடத்தியவர். தனி கட்சி கண்டபிறகு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்திய பிளவு என்று 1996இல் மூப்பனார் ஏற்படுத்திய பிளவை சொல்லவேண்டும்.1991 -1996 ஆட்சி காலத்தில் அதிமுக அரசின் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், எதிர்ப்பும் காங்கிரஸை தாக்காமல் இருக்க அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்றார் மூப்பனார்.

தமிழ் மாநில காங்கிரஸ்:

ஆனால் நரசிம்மராவ் அதிமுகவுடன் அணி அமைக்கும் முடிவில் அசாத்திய உறுதி காட்டினார். விளைவு காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார் மூப்பனார். பத்திரிக்கையாளர் சோ ராமசாமியின் உதவியால் திமுக – தாமாக அணி உருவானது. அந்த அணிக்கு நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவு அளித்தார். பா.சிதம்பரத்தின் பகிரத முயற்சிகளால் அந்த கட்சிக்கு சைக்கிள்  சின்னம் கிடைத்தது. 40சட்டமன்றம், 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட தாமாக அபார வெற்றியை பிடித்தது.

ஜி.கே வாசன்:

மத்திய அமைச்சரவையில் தவிர்க்க முடியாத சக்தியாக உருப்பெற்றது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ஒரு தேசிய கட்சியில் இருந்து பிரிந்து உருவான ஒரு கட்சி பெரும் வெற்றியை பெற்றது என்றால் அது தாமாக மட்டுமே. மூப்பனாரின் மறைவிற்குப் பிறகு தாமாகாவை காங்கிரஸில் சேர்த்த ஜி.கே வாசன் இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்து விட்டு, பிறகு காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் தாமாகவை தொடங்கிவிட்டார்.

பாமக பிளவு;

தேசிய, திராவிட இயக்கங்களை தாண்டி வேறு இயக்கங்களும் பிளவுபட்டு உள்ளனர். குறிப்பாக பாமக அவ்வப்போது பிரிவுகளும், விலகலும் நடந்தன. என்றாலும் அதன் காரணமாக அந்த கட்சிக்கு பெரிய சேதாரம் ஏற்படவில்லை. சேதாரத்துக்கு வேறு காரணகள் இருந்தன என்பன தனி கதை. உதாரணமாக பாமகவின் தொடக்கத்தில் தலைவர்களுள் முக்கியமானவராக பேராசிரியர் தீரன் கருத்து வேறுபாடு காரணமாக பாமகவில் இருந்து விலகினார். தனிக்கட்சி தொடங்கினார், ஆனால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. நாம் தமிழர், அதிமுகவில் இருந்தவர், தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்..

தமிழக வாழ்வுரிமை கட்சி:

வன்னிய அடிகளார், பாமகவின் இஸ்லாமிய முகமாக பார்க்கப்பட்ட  பழனிபாபா, தலித் முகமாக பார்க்கப்பட்ட ஜான்பாண்டியன், தலித் எழில்மலை என்று பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் பாமகவில் இருந்து விலகியுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரனும் அவர்களில் ஒருவர் என்றாலும், பாமகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி, ஈழம், தமிழ் தேசியம் என்று ஓரளவுக்கு பரபரப்புடன் இயங்கி வருபவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் மட்டுமே. பிளவுகளும், பிரிவுகளும் தேர்தல் அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறி போய் விட்டன. அதுபோலவே பிரிந்து போனவர்கள் கண்கள் வனிக்க, இதயம் இனிக்க மீண்டும் இணைவது இயல்பான ஒன்றாகிவிட்டன. அடசியலில் இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்கலாம். கேள்வியிலே பதில் இருக்கின்றது ”அரசியல்”……

Categories

Tech |