கடந்த தேர்தல்களில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பெற்ற வாக்கு விழுக்காடு பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாமக தொடங்கப்பட்ட 31 ஆண்டுகளில் 6 சட்டமன்ற தேர்தல்களையும், 7 நாடாளுமன்ற தேர்தல்களையும் சந்தித்துள்ளது. தேமுதிக கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் 3 சட்டமன்றத் தேர்தல்களிலும், 3 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டுள்ளது. 2006 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை பாமகவின் வாக்கு சதவீதம் 5.65. திமுக கூட்டணியில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களை கைப்பற்றியது. 2005ல் கட்சி தொடங்கிய விஜயகாந்த் முதன்முதலில் 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 8.4% வாக்குகளை கைப்பற்றினார்.
அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 6 இடங்களில் களம் கண்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. பெற்ற வாக்கு சதவீதம் 6.8. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 10.3 சதவீத வாக்குகளை வசப்படுத்தியது. 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக 5.2% வாக்குகளை கைப்பற்றி, வெறும் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 7.9 சதவீத வாக்குகளை அறுவடை செய்தது. ரிஷிவந்தியின் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரானார்.2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாமக 4.4 சதவீதம் வாக்குகளையும், தேமுதிக 5.1 சதவீத வாக்குகளையும் பெற்றன.
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக 5.3 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால் அந்த தேர்தலில் தேமுதிகவுக்கு சரிவு ஏற்பட்டது. வெறும் 2.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாமக 5.4 சதவீதம் வாக்குகளையும், தேமுதிக 2.2 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.இந்த நிலையில் பாமக தனது வாக்கு சதவிகிதத்தை இந்த முறையும் தக்க வைக்குமா? 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட சரிவிலிருந்து தேமுதிக எழுச்சி பெறுமா? என்பது தற்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி.