திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுத்திட வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், வாக்காளர்களுக்கு தேர்தலையொட்டி பணம் வழங்கப்படுவதை தவிர்க்க வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அதில் அவர் பேசுகையில், கிளை வங்கிகளுக்கிடையே வாகனங்களில் பணம் கொண்டு செல்ல முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்புவது அவசியம். வங்கிகள் நாள்தோறும் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பிட வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுத்து நிறுத்திட தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுடைய வங்கி கணக்குகளை கண்காணித்து வரவேண்டும். அதிகப்படியான பண பரிவர்த்தனை நடைபெற்றால் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு தகவல் அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் போட்டாலோ, எடுத்தாலோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் வாடிக்கையாளர்கள் போன்பே, கூகுள்பே மற்றும் இணைய வழி பரிவர்த்தனை ஆகியவற்றில் சந்தேகப்படும்படியாக இருந்தால் தகவல் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவுரைகளை வங்கிகள் பாரபட்சமின்றி செய்ய வேண்டும். தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அதிகப்படியாக பணம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே தெரிந்தவர்கள் என்று அஜாக்கிரதையாக விட்டுவிட வேண்டாம், தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து நாள்தோறும் தகவல்களை தேர்தல் பிரிவிற்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.