தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாது என மாவட்ட வழங்கல் அதிகாரி கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசன் வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர்கள் அதிகமாக வேலைதேடி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு வேலைக்கு வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களில் உள்ள ரேஷன் கார்டுகளை திருப்பூருக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாலுகா அலுவலகங்களில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாகவும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் காரணமாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்படாது என அறிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தேர்தல் முடிவடைந்த பின்னரே ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.