சரக்கு வேனில் பக்தர்களை ஏற்றுக் கொண்டு வரும்போது சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள லந்தக்கோட்டை கிராமத்தில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வெகுவிமர்சையாக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருவதுண்டு. அந்த வகையில் நேற்று பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை நிறுத்தி அதில் ஏறி பயணம் செய்துள்ளனர்.
அந்த வேன் வெள்ளியணை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் அந்த வேனில் பயணம் செய்த 18 பக்தர்களும் காயமடைந்துள்ளனர். உடனேஅவ்வழியாக சென்றவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.