தெலுங்கானா மாநிலத்தில் 6 வயது சிறுமி தினமும் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆன்லைன் வகுப்பில் படிக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இதனையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் சில கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு இணையதள வசதி இல்லாத காரணத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் மஞ்செரியல் மாவட்டத்திலுள்ள மோரிகுடா என்ற பழங்குடி குக்கிராமத்தில் சரஸ்வதி என்ற 6 வயது சிறுமி ஆன்லைன் வகுப்பில் படிக்க தினமும் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து சிக்னல் பகுதியை அடைந்ததும், ஒரு மரத்தின் கீழ் கல்வெட்டில் அமர்ந்து படித்து வருகிறார். அவருக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.