விவசாயின் வீட்டுக்கு தீ வைத்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கட்டிமேட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீடு நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் வீட்டிலுள்ள உபயோகப்பொருட்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, மிக்ஸி, கிரைண்டர், பணம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து தங்கராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தங்கராஜ் வீட்டிற்கு தீ வைத்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.