தமிழகத்தில் போலீசார் தனியாக ரோந்து போனால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு பற்றியும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.
அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். மேலும் தமிழகம் முழுவதிலும் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் போலீசார் தனியாக ரோந்து போனால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் விதிமுறைகளின் படி இரவு நேரத்தில் எஸ்ஐக்கள் தனியாக ரோந்து செல்ல கூடாது. அதேபோல உயரதிகாரிகள் இல்லாமல் வாகன சோதனை நடத்தக்கூடாது. போலீசார் சட்டவிரோத செயல்களுக்கு துணை போவதை தடுக்கவும் பாதுகாப்பு கருதியும் இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.