திண்டுக்கல்லில் நிதி நிறுவன உரிமையாளரிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ.1 கோடியே 25 லட்சம் மற்றும் 40 பவுன் நகையை மோசடி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துபழனியூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் அறிவழகன் என்பவருடன் நட்பு இருந்து வந்துள்ளது. பாலசுப்ரமணியம் குஜராத்தில் தனியார் நிறுவனம் வைத்து வேலை செய்து வருகிறார். அதில் கிடைக்கும் லாப பணத்தை தனது வங்கி கணக்கில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது நண்பர் அறிவழகன் ஒரே வங்கி கணக்கில் சேமிப்பதை விட 4, 5 வங்கி கணக்கில் சேமித்து வைத்தால் நல்லது என்று கூறியுள்ளார். இதனால் பாலசுப்ரமணியன் 2 வங்கி கணக்குகள் தனது பெயரில் தொடங்கி பணம் செலுத்தி வந்துள்ளார். மேலும் அறிவழகன், அவரது மனைவி கலைச்செல்வி, பாலசுப்ரமணியன் மற்றொரு நண்பன் முருகன் ஆகியோரின் பெயரில் வங்கி கணக்குகள் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து பாலசுப்ரமணியம் ஏ.டி.எம் கார்டுகளை அறிவழகன் வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் பணம் இவர்களது வங்கி கணக்குகளிலும் செலுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே பாலசுப்ரமணியனின் தந்தை காலமானதால் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அறிவழகன் தனது மனைவி கலைச்செல்வியின் தங்கை முத்துலட்சுமியை பாலசுப்பிரமணியத்துக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். மேலும் ஒரு வருடத்திற்கு பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் தொழிலை கவனிப்பதற்காக பாலசுப்பிரமணியம் குஜராத்திற்கு சென்றுள்ளார். முத்துலட்சுமிக்கு 45 பவுன் நகையையும் பாலசுப்பிரமணியிடமிருந்து இருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் திடீரென முத்துலட்சுமியை பாலசுப்ரமணியத்திற்கு திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் பாலசுப்பிரமணியன் அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய ரூ.1 கோடியே 25 லட்சம் மற்றும் 45 பவுன் நகை ஆகியவற்றை திருப்பி கேட்டுள்ளார். அதனை அறிவழகன் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள 2-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் பாலசுப்ரமணியம் இந்த மோசடி குறித்து மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் கலைச்செல்வி, முத்துலட்சுமி, அறிவழகன், கலைச்செல்வியின் தந்தை அரிச்சந்திரன் ஆகிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கலைச்செல்வி, அறிவழகன், முத்துலட்சுமி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர்.