சென்னை நந்தனம் அருகே மாநகர பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.
ஆந்திராவை சேர்ந்த சுதா, நாகலெட்சுமி, பவானி ஆகிய மூவரும் சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்து, எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று காலை 9 மணி அளவில் ஒரே பைக்கில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு தாம்பரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது இவர்கள் பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். ஹெல்மெட் அணிந்திருந்ததால் சுதா மட்டும் தலையில் பலத்த காயத்துடன் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான நாகலெட்சுமி, பவானியின் உடல் பிரேதச பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநர் குணசேகரன் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.