வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா பொட்டலங்களை வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அதே சிறையில் அடைத்து விட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர் அங்கிருந்து தென்னை மரத்தில் ஏறி சிறை வளாகத்தை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து சிறை காவலர்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்த வாலிபரை காவலர்கள் துரத்தி சென்று பிடித்து விட்டனர்.
அதன் பின் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அந்த நபர் வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்திராநகர் பகுதியில் வசிக்கும் சிவ சக்தி என்பதும், அவர் 45 கிராம் கஞ்சாவை வைத்திருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதோடு தென்னை மரத்தில் ஏறி சிறைக்குள் அந்த வாலிபர் கஞ்சா பொட்டலங்களை வீச முயற்சி செய்ததை காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த சிறை காவலர்கள் காவல் நிலையத்தில் அந்த வாலிபரை ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் சிவசக்தியை அடைத்து விட்டனர்.