கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. தற்போது ஆளும் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்துள்ளதாக மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து ஜூலை 12ம் தேதி கர்நாடக மாநிலத்தின் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் குமாரசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவையில் வருகின்ற 18ஆம் தேதி காலை 11 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.