ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு கலாச்சாரம் என்று கூறி வரும் பிரதமர் மோடி…. நாடு முழுவதும் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் ? என்று சொல்லவில்லை என திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி இரண்டாவது நாளானநேற்று பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கல்வி முறையில் ஒரு கொள்கையை வகுப்பதற்கு முன்பு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் கலந்துரையாட வேண்டும் என்று குறிப்பிட்ட திரு ராகுல் காந்தி, ஆனால் இவை நடப்பதே இல்லை என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் திரு ராகுல் காந்தி சுவாமி தரிசனம் செய்தார். பூரண கும்ப மரியாதையுடன் திரு ராகுல் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவிலுக்கு வெளியே காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, அங்குள்ள இளநீர் கடை ஒன்றில் இளநீர் பருகினார். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடையே உரையாற்றியவர், நாடு முழுவதும் சிறு குறு தொழில்களை மோடி அரசு அழித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் பொதுமக்களிடையே உரையாற்றிய திரு ராகுல் காந்தி, நாட்டில் சிறு குறு தொழில்கள் அனைத்தையும் மோடி அழிக்க பார்ப்பதாக குற்றம் சாட்டினார். தஞ்சாவூர் பொம்மை போல தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருவதாகவும், லஞ்ச லாவண்யம் இருப்பதன் காரணமாக மோடிக்கு அவர் தலைவணங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்