குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புறனபள்ளி, நரசாபுரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் புதிதாக ஆழ்துளை குழாய் அமைத்து சீராக தண்ணீர் விநியோகம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
மேலும் மக்களின் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும், இந்த குடிநீர் தட்டுப்பாடை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.