இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று 1-1 என சமநிலை வகித்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் புதிதாக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்த முதல் நாளிலேயே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் முதல் போட்டியில் 112 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லே 53 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அஸ்வின் 3, இஷாந்த் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிதானமாக தொடங்கிய போதும், சுப்மன் கில் 11, புஜாரா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது. அதன்பின் ரோஹித் உடன் ஜோடி சேர்ந்த கோலி நிதான ரன் குவித்தார். மறுமுனையில் ரோஹித் அவ்வபோது பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார். இந்த இணை 3ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் எடுத்தபோது கோலி 27 ரன்களில் லீச் பந்துவீச்சில் போல்டாகினார். இதையடுத்து இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியும் சுழல் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ரோஹித் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் ஜே ரூட் 5, ஜாக் லீச் 4, ஆர்ச்சர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை 33 ரன்கள் பின்னிலையோடு தொடங்கிய இங்கிலாந்து அணி இம்முறையும் இந்திய சுழலில் சிக்கி சிதைந்தது. அந்த அணி 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். அக்சர் 5, அஸ்வின் 4, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனால் இந்திய அணி வெற்றி பெற 49 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக இமாலய வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், உலக அளவில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில்(77) 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். முத்தையா முரளிதரன்(72 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். மேலும் இப்போட்டியில் சர்வதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கடந்த வீரர் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார்.
மூன்று ஆண்டுகள் கழித்து இரண்டு நாட்களுக்குள் ஒரு டெஸ்ட் போட்டி முடிந்துள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டு இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி 2 நாட்களில் முடிந்தது. அப்போட்டியிலும் இந்திய வாகை சூடியது.
இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் நடப்பு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. மேலும் இறுதிப்போட்டிக் தகுதி பெற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த தொடரை இந்தியா 2-1 அல்லது 3-1 என கைப்பற்றினால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதே வேளையில் இங்கிலாந்து அணி அந்த வாய்ப்பை பறிகொடுத்திருக்கிறது.
ஒரு வேளை இந்தத் தொடர் 2-2 என முடிந்தால் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளதால் அடுத்த போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கு காரணம் இந்தப் போட்டியில் கைப்பற்றப்பட்ட 30 விக்கெட்டுகளில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்களே வீழ்த்தியதே. அடுத்த போட்டி மார்ச் 4ஆம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.