கேரளாவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்வதற்காக வைத்திருந்த விஷம் கலந்த ஐஸ்கிரீமை அறியாமல் அவரின் தங்கையும் ,மகனும் உட்கொண்டு பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்கள்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹங்கட் பகுதியை சேர்ந்த 25 வயதான வர்ஷா என்ற பெண் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் அவர் ஐஸ்க்ரீமில் எலி மருந்தை கலந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் சிறிதளவு உட்கொண்டுள்ளார். பிறகு அதனை அப்படியே மேசை மீது வைத்துவிட்டு அறைக்கு சென்றுள்ளார். இதனை அறியாத அவரின் ஐந்து வயது மகனான அத்வைத் மற்றும் 19 வயதான அவரின் சகோதரி திரிஷாவும் அந்த ஐஸ் கிரீமை சாப்பிட்டுள்ளனர்.
பிறகு பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அன்று இரவே அத்வைத் வாந்தி எடுத்து உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு பிப்ரவரி 12 ஆம் தேதி காலையில் அத்வைத் உயிரிழந்தான் .இதனை தொடர்ந்து திரிஷாவும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .கடந்த பிப்ரவரி 24 அன்று புதன்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தார். வர்ஷா விஷம் கலந்த ஐஸ்கிரீம் உட்கொண்டதால் எந்த ஒரு பாதிப்பும் தனக்கு ஏற்படாத காரணத்தால் அவர் இதை பற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை. குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி உட்கொண்ட பிறகு தான் இவ்வாறு நடந்திருக்கும் என்று நினைத்தனர்.
ஏற்கனவே இந்த சம்பவம் குறித்து பிப்ரவரி 17 ஆம் தேதி வர்ஷாவின் உறவினர் சனோத் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் வர்ஷா உண்மையை ஒப்புக் கொண்டார். இந்நிலையில் வர்ஷாவின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.