செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், பத்து ஆண்டு காலமாக அதிமுக அரசு செய்திருக்கிற சாதனைகளை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் அது சாதனையா ? அல்லது மக்களுக்கு சோதனையா என்பதை வருகிற தேர்தலில் கட்டாயம் மக்கள் உணர்த்துவார்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இந்த அரசு போய்விட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு, எடப்பாடி அவர்களின் தலைமையிலான இந்த அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய ஒரு பினாமி அரசாங்க அல்லது பொம்மலாட்ட அரசாகத்தான் இயங்கி வந்திருக்கிறது. எனவே எதிர் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் பிஜேபி – அதிமுக கூட்டணிக்கு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.
கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சியாக அதிகாரப்பூர்வமாக அழைப்பார்கள். அப்படி அழைப்பு வரும்போது நாங்கள் உரிய முறைப்படி பேச்சுவார்த்தை நடத்துவோம். நல்ல ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடம் என்பது தங்களை தாங்களே பாராட்டிக்கொள்கின்ற முயற்சி.நல்ல ஆட்சி தந்தார்களா ? நல்ல ஆளுமைக்கான குறியீடா ? என்பதை சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் தான் தீர்ப்பு அளிப்பார்கள், சான்று அளிப்பார்கள். எங்களுக்கான தொகுதி அடையாளப் படுத்தப்பட்ட பிறகு, அந்த தொகுதிகளுக்கு மட்டும் விருப்ப மனுக்களை பெறுவோம் என தெரிவித்தார்.