கேரளாவில் இருந்து இனி வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பரிசோதனை மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதனையடுத்து கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு இ- ரெஜிஸ்ட்ரேஷன் கட்டாயம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் நீலகிரிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்டுப்பாடு விதித்துள்ளார்.