பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டதால் மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவா மணிகண்டன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் அண்ணாநகர் பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தேவா மணிகண்டனின் ஆசிரியர் மாணவனின் தந்தையை அழைத்து “உங்கள் மகன் ஒழுங்காக படிப்பதில்லை” என்று மாணவன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் மாணவன் மன வேதனையில் இருந்துள்ளான். சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த மாணவன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படிக்க செல்வதாக கூறி கதவை பூட்டி உள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் மாணவன் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாணவனின் தற்கொலைக்கு பள்ளியில் கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று கூறிய உறவினர்கள் மற்றும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அண்ணாமலைநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.