மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற ஊரில் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாள் மகம் நட்சத்திரத்தில் பிறந்தார். மூன்று வயது குழந்தையாக இருந்தபோது அவரது தந்தையார் ஜெயராம் மறைந்தார். வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ள தாயார் சந்தியா திரைத்துறையில் கால் வைத்தார்.
![]()
பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்த அவர் தொடர்ந்து வந்த திரைப்பட அழைப்புகளால் 1964 இல் தனது முதல் படமான வெண்ணிற ஆடையில் நடித்தார். இந்தியாவின் மிக அதிக சம்பளம் பெறும் கதாநாயகியாகவும் தமிழில் முதலிடம் பெற்ற கதாநாயகியாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 1968இல் மட்டும் அவர் 21 படங்களில் நடித்து சாதனை படைத்தார். 1980இல் முழுவதுமாக திரைப்படங்களில் இருந்து விலகி அரசியலுக்கு வந்தார்.

கதாநாயகியாக இருந்த நூறாவது படம் திருமாங்கல்யம். நிறைவு படம் நதியை தேடி வந்த கடல். 1981இல் அதிமுகவில் இணைந்தார், தனது அயராத பணியால் 1983 லேயே அஇஅதிமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். 1984இல் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1987 புரட்சித்தலைவரின் மறைவை அடுத்து ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளித்து கட்சியின் பொதுச் செயலாளரானார்.

1989இல் எதிர்க்கட்சித் தலைவராகவும் 1991 இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்று வரலாற்று சாதனை படைத்தார். 2016 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி அன்று ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் தமிழகத்தில் மிக அதிக முறை முதல்வராக இருந்தவர் என்ற சிறப்பை தனதாக்கிக்கொண்டார். அதிமுகவை எதிரிகளிடம் இருந்து மீட்டு இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி ஆக்கியவர். தமிழகத்தை தாழ்வில் இருந்து மீட்டு இந்தியாவில் முதன்மை மாநிலம் ஆக்கியவர். மக்களை தவிக்க விட்டு டிசம்பர் 5 ல் 2016 ஆம் ஆண்டு இம்மண்ணில் இருந்து மறைந்தார்.