சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முதல் மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அப்போது பயணிகளுக்கு அதிக பட்ச கட்டணமாக 70 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதனை பரிசீலனை செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி 70 ரூபாயாக இருந்த கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், க்யூ ஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.